×

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 100 நடைபாதை கடைகள் அகற்றம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் சாலையோரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து, ஏராளமானோர் தள்ளுவண்டிகளில், சின்னசின்ன வீட்டு உபயோக பொருட்கள், பழங்கள் ஆகியவற்றை விற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பலர் விற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பீக்அவர்சில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அலுவலகம், மருத்துவமனை செல்பவர்கள், முக்கிய வேலைகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து, பொதுமக்களிடம் இருந்து சிஎம்டிஏ நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன்பேரில், சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடைகாரர்கள்,  நடைபாதை வியாபாரிகள் ஆகியோரை சிஎம்டிஏ நிர்வாகம் கடைகளை காலி செய்யும்படி பலமுறை எச்சரித்தது. ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அகற்றாமல் தொடர்ந்து, அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக இருந்த 100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.


Tags : Removal of 100 sidewalk stalls obstructing traffic
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை