×

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 2 செயற்பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை: மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 2 செயற்பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, மாநகராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை தனியாக செயல்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்படும் புகார்களின் அடிப்படையில் அவர்களும் விசாரணை மேற்கொள்ளலாம்.

இதன்அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் பி.பானுக்குமார் ஆகிய 2 செயற்பொறியாளர்கள் மீது முதற்கட்ட விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கோரி கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் சென்னை மாநகராட்சியில் 11-வது மணடலத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ஆர்.சுரேஷ்குமார், 12-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் பானுக்குமார் (தற்போது 9-வது மண்டலத்தில் பணியாற்றி வருகிறார்) இவர்கள் மீது முதற்கட்ட விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆணையரும், சிறப்பு அலுவலர் தலைமையில் கடந்த ஜூலை 29ம் தேதி மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு தான் எதற்காக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

Tags : Chennai , Anti-Corruption Department Investigates 2 Engineers Working in Chennai Corporation: Corporation Administration Order
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...