×

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்: அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என திமுக சார்பில் முதல்வர் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது.

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும், “இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களை தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே முதல்வர் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ‘7 பேர் விடுதலை குறித்து அரசு முடிவெடுக்கும்’
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஐந்தாண்டு சட்டபடிப்புகளில்  2021-22ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சியை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ரகுபதி நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார், சட்டக்கல்வி இயக்குனர் சொக்கலிங்கம், பதிவாளர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

 பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘26ம் தேதி வரை மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு சீர்மிகு சட்டக்கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படும். 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தெளிவான முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும், குடியரசு தலைவர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. முடிவு எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்’’ என்றார்.

Tags : Minister ,S. Raghupathi , New law banning online rummy games to be introduced soon: Minister S. Raghupathi
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...