மாணவிக்கு காதல் டார்ச்சர்: ‘போக்சோ’வில் அதிமுக பிரமுகர் கைது

வேலூர்: மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த அதிமுக பிரமுகரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கவுதம். இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நகர துணை தலைவராக பொறுப்பில் இருந்து வந்தார். இவர் செல்போன் மூலம் பிளஸ்2 மாணவியை தொடர்பு கொண்டு தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை வேறு மாதிரி சித்தரித்து தவறான தகவல்களையும் பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, இதுபற்றி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இத்தகவலறிந்த அதிமுக மேலிடமும் கவுதமை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி நேற்று கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: