×

விமானப்படை பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானி மாயம்: அணையில் விழுந்ததால் தேடும்பணி தீவிரம்

பதான்கோட்: ஜம்மு-காஷ்மீரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர், அணையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மாயமான விமானி மற்றும் துணை விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் செயல்பட்டு வரும் பாதுகாப்புப் படை தளத்தின் மமுன் பகுதியில், விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. மிகவும் தாழ்வான பகுதியில் பறந்து விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். விமானத்தில் விமானியும், துணை விமானியும் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட 10 நிமிடத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ரஞ்சித் சாகர் அணையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, அதிக அளவில் சத்தம் எழுந்ததாக அணைப் பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பதான்கோட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஞ்சித் சாகர் அணை, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநில எல்லைப்பகுதிகளை உள்ளடக்கியது. அணைக்கு அருகே ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான விமானி மற்றும் துணை விமானியை தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பஞ்சாப் பகுதியிலிருந்து மீட்புப் படகுகளும் விரைந்தது.

இதேபோல, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு மேல் பகுதியில் தாழ்வாக பறந்தபோது, இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், பஞ்சாப் எல்லையையொட்டிய கத்வா மாவட்டத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Air Force, training, helicopter, 2 pilot, magic
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...