×

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்: அரையிறுதிக்கு ரவிக்குமார், தீபக் புனியா தகுதி

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் ஃப்ரீ ஸ்டைல் 57 கிலோ மற்றும் 86 கிலோ எடைப்பிரிவுகளில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா ஆகியோர்  அரையிறுதிக்கு முன்னேறி, சாததனை படைத்தனர். இன்று காலை டோக்கியோவில் உள்ள மகுஹாரி மெஸ்சி ஹாலில் ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, கொலம்பியாவின் ஆஸ்கர் எடார்டோவுடன் மோதினார். அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் தாஹியா, 2020 மற்றும் 2021ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து, 2 முறை தங்கம் வென்று சாதனை படைத்து்ளளார்.

இன்றைய போட்டியில் முதலில் 2 புள்ளிகளை பெற்று ரவிக்குமார் முன்னிலையில் இருந்தார், ஆனால் மீண்டெழுந்த ஆஸ்கர், பதிலுக்கு 2 புள்ளிகளை வென்றார். முதல் பாதி ஆட்ட முடிவில் 3-2 என்ற புள்ளிகளில் ரவிக்குமார் முன்னிலையில் இருந்தார். 2ம் பாதியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய ரவிக்குமார் தொடர்ந்து 2, 2 புள்ளிகளாக எடுத்து, 10 புள்ளிகளை பெற்றார். போட்டி முடிவில் டெக்னிக்கல் சுப்பீரியாரிட்டி முறையில் 13-2 என்ற புள்ளிக்கணக்கில் ரவிக்குமார் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

தொடர்ந்து காலிறுதிப் போட்டிகளும் இன்று காலையிலேயே நடந்தன. காலிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் ஜார்ஜிவேலன்டினோவை 14-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, ரவிக்குமார் அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்து அதே ஃப்ளோரில் நடந்த ஃப்ரீஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியாவும், நைஜீரியாவின் ஏகர்கெம் அகியோமோரும் மோதினர். இதில் முதல் பாதியில் தீபக் புனியா 4 புள்ளிகளும், அகியோமோர் ஒரு புள்ளியும் பெற்றனர். 2ம் பாதியில் தீபக் புனியா 1, 2, 1, 2, 2 என தொடர்ந்து புள்ளிகளை பெற்று, ஆதிக்கம் செலுத்தினார்.

இதில் திணறிய நைஜீரிய வீரர், 2ம் பாதியில் புள்ளிகள் ஏதும் எடுக்கவில்லை. இதையடுத்து 12-1 என்ற புள்ளிக்கணக்கில் தீபக் புனியா வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த காலிறுதிப் போட்டியில் சீன வீரர் லின் சூஷென்னை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, தீபக் புனியாவும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

Tags : Olympic ,Ravikumar ,Deepak Punia , Olympic men's wrestling: Ravikumar, Deepak Punia qualify for semifinals
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...