கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்-மக்களுக்கு விநியோகித்த கலெக்டர்

ராமநாதபுரம் :  ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா கூறினார்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடக் கூடாது. பேருந்துகளில் பயணிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

கலெக்டர் சந்திரகலா கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுநடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதிக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். ராமநாதபுரம் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். புதிய பேருந்து நிலைய சாலை ஓர வியாபாரிகளும் உழவர் சந்தையில்  வியாபாரத்தை தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீர்பிடி பகுதிகளை பார்வையிட்டார். பெரிய கண்மாயிலிருந்து ராமநாதபுரம் நகரில் உள்ளஊரணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான நீர் வழித்தடங்களை தடையின்றி பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், நகராட்சி பொறியாளர் நிலேஸ்வர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>