ரங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார் காவிரி தாயாருக்கு ரங்கநாதர் சீர்

திருச்சி : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமாக அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கிருந்தே காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகத்தில் கொரோ னா 2ம் அலை ஓய்ந்த நிலையில், தற்போது 3வது தொற்று பரவல் மீண்டும் லேசாக துவங்கி உள்ளது. இதனால் திருச்சி உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. மேலும் முக்கியமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ல் நம்பெருமாள், அம்மா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலையில் காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் நம்பெருமாள், அம்மா மண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றி கொண்டு மூலஸ்தானம் சென்றடைவார்.

இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு நாளான நேற்று நம்பெருமாள், அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக ரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு ரங்கவிலாஸ் மண்டபம் வந்தடைந்தார். அங்கு மாலை 4 மணிக்கு அலங்காரம், அமுது கண்டருளி மாலை 4.45 மணிக்கு அங்கிருந்தே காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி, மாலை 5.45 மணிக்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு நம்பெருமாள், ரங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories:

More