ரேஷனில் குடும்ப தலைவி ரூ.1000 உதவி தொகை பெற பெயர் மாற்ற வேண்டுமா? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா தொற்றில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதுவரை 99 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களும், 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கருப்பு நிறம் கொண்ட எந்த அரிசியையும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் அரிசி ஆலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற அரிசி கொடுத்தால் தனியார் அரிசி ஆலைகள் மீது தற்காலிக ரத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசி ஆலைகள் இருக்கும் கலர் சர்க்கஸ் வாங்குவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று யாரும் அச்சமடைய வேண்டாம். இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவினை முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>