ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பிடிஓ அலுவலகம் முற்றுகை

செய்யூர்: இந்தளூர் ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, சித்தாமூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திடீர் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இந்தளூர் ஊராட்சியில் பெரியார் நகர், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைபுஞ்சை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும். பெரியார் நகரில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாக கூறப்படும் ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும். இருளர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்காதது என்பது உள்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ஞானபிரகாசம் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி செயல்பாடுகள் குறித்து புகார் மனு அளித்தனர். அதை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>