சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.04 % மாணவர்கள் தேர்ச்சி

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முன் எப்போதும் இல்லாத வகையில் 99.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா 2வது அலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தபடி, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 12 மணிக்கு சிபிஎஸ்இ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 99.04 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 7 % கூடுதலாகும். தேர்வு எழுதிய 21.13 லட்சம் பேரில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 98.89 ஆக உள்ளது.  மாணவிகள் அவர்களை விட கூடுதலாக 0.35 சதவீதம் பெற்று, 99.24 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். 16,639 மாணவர்களின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தாண்டு தகுதி பட்டியல் வெளியிடப்படாது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் 99.99 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்திலும், பெங்களூரு 99.96, சென்னை 99.94 சதவீதத்துடன் 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளன.

Related Stories:

>