×

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா மனு: சிபிசிஐடி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுசில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ம் தேதி டெல்லியில் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவர் தாக்கல் செய்த 2 ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டன.  இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனுதாக்கல் செய்துள்ளார்.

 அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை. சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்‌ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருகிறேன். ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்று வருகிறேன். எனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தியுள்ளார். ஆன்மிக பயணமாக டெல்லி சென்ற என்னை சிபிசிஐடி கைது செய்து ஒவ்வொரு வழக்காக பதிவு செய்து வருகிறது என்று கூறியுள்ளார். இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுக்களுக்கு சிபிசிஐடி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Sivasankar Baba ,CPCIT , Sivasankar Baba petitions for bail in sexual harassment case: CBCID responds to ICC order
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை