×

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்: விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான மழைநீர் வடிகால் அமைக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற  தொகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்குவதாகவும், பார்த்தசாரதி கோயில் குளம், மழைநீர்  சேகரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், அதை மழைநீர் தேங்கும் வகையில் சீரமைக்க  வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி  ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில், சேப்பாக்கம் -  திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.40 கோடி செலவில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி மற்றும்  ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால் அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கையை  மாநகராட்சி தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில்  பழமையான மழைநீர் வடிகால்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கவும், இணைப்பு இல்லாத  பகுதிகளில் இணைப்பு வழங்கவும் பணிகள் நடைபெற உள்ளன.

அதேபோல்  பார்த்தசாரதி கோயில் குளத்தில் மழைநீர்  சேமிக்கும் வகையில் ஜெர்மன்  தொழில் நுட்பத்திலான வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், சாலை மட்டத்தில் இருந்து 4 அடி  ஆழம், 19 அடி நீளம், 3.4 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்படும்.  பள்ளத்திற்குள் 6 முதல் 10 எம்.எம். கன அளவுள்ள பொடி ஜல்லி கற்கள், 1.5  செ.மீ உயரத்திற்கு நிரப்பப்படும். அதன்மேல் 400 ஜி.எஸ்.எம் அடர்த்தி கொண்ட  ஜியோ பில்டர் எனும் பேப்ரிக் கிளாத் விரிக்கப்படும். பின் ஜெர்மன்  தயாரிப்பான பாலிபுரோபோலின் எனும் பிளாஸ்டிக்கால் ஆன 3.9 அடி நீளம், 500  மி.மீ, உயரம், 80 மி.மீ அகலமுள்ள டனல் வைக்கப்படும். இப்பணி  முடிக்கப்பட்டவுடன், 20 அடி நீளத்திற்கு மட்டும் 5 டனல் வைக்கப்படும்.  அதன்  மேல் மீண்டும் ஜியோ பில்டர் பேப்ரிங் கிளாத் போர்த்தப்பட்டு டனல்  மூடப்படும். பக்கவாட்டில் உள்ள பள்ளங்களில் 20 எம்.எம். ஜல்லி, டனல்  உயரத்திற்கு கொட்டி இடைவெளிகள் மூடப்படும். அதன்மேல் சாலை மட்டத்திற்கு  கிராவல் கல் பதிக்கப்பட்டு அதன் இடைவெளியில் மணல் கொட்டி புற்கள்  வளர்க்கப்படும். இதனால் வடிகாலுக்கு செல்லும் மழைநீர் சகதிகள்  வடிக்கப்பட்டு சுத்தமான நீராக குளங்களுக்கு செல்லும். இப்பணிகளுக்கு மிக குறுகிய இடம் தான் தேவைப்படும் என்பதால் விரைவில்  இப்பணிகள் முடிக்கப்படும்,’ என்றனர்.

Tags : Tiruvallikeni block , Chepauk - Rainwater drainage in German technology in Tiruvallikeni block: Commencement of works soon
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...