×

சுற்றுச்சூழல் வழக்குகளை முதன்மை அமர்வில் பட்டியலிடும் அறிவிப்புக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செல்வராஜ்குமார், மீனவர் நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த உத்தரவு காரணமாக குடிமக்கள், தொலை தூரத்தில் உள்ள தலை நகருக்கு பயணப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதன்மை அமர்வின் உத்தரவு தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டங்களுக்கு விரோதமானது. எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வுகள் எங்கு அமைய வேண்டும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட மாநிலங்கள் எவை என்று குறிப்பிட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு அறிவிப்பாணை இல்லாமல் பிற அமர்வுகளில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வு விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறி முதன்மை அமர்வின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.  மேலும், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : ICC , Prohibition on Notice of Listing of Environmental Cases in Primary Session: ICC Order
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...