அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: அரசுப்போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில் எந்தவித பயணக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடு செய்வதற்காக பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் ரூ.5 என்பது குறைந்தபட்சக் கட்டணமாக இருந்தது, இரட்டிப்பாக வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில், எந்தவித பயணக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. குறைந்தபட்ச கட்டணமான ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.  

அவ்வாறு நிர்வாகத்திற்கு தெரியாமல் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் அறிவித்த இந்த திட்டமானது, பொதுமக்களிடையே குறிப்பாக பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கு மாதம் சராசரியாக ரூ.1000 முதல் ரூ.2000 வரை சேமிப்பாகிறது. இதனால் முதல்வரை பெண்கள் பாராட்டுவதோடு, நன்றியும் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை வழித்தடத்தில், தவறுதலாக ஒரு இடத்தில் பயணச்சீட்டு வழங்கிய நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஒரு சில இடத்தில் நடக்கும் ஏதோ ஒரு தவறை வைத்து ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துக் கழகங்களை குறை கூறுவது ஓபிஎஸ்க்கு அழகல்ல. முதல்வருக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தினை காழ்ப்புணர்ச்சியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், தேவையில்லாமல் ஓபிஎஸ் விமர்சனம் செய்கிறார்.  ஆகவே இதுபோன்ற குற்றச்சாட்டு அறிக்கைகளை கைவிட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>