×

பிரதமர் மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட 15 கட்சி தலைவர்கள் அவசர ஆலோசனை: ராகுல் காந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் முக்கிய முடிவு

புதுடெல்லி: பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் தலைமையில் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமென ராகுல் அழைப்பு விடுத்தார். கூட்டம் முடிந்த பின், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்றனர். இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விவாதம் நடத்த ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளி காரணமாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.  இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, நல்ல ஒத்துழைப்புடன் ஒன்றிய பாஜ அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த கோரி தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும் ஒன்றிய அரசு முறையாக பதிலளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க 17 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, நாடாளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பாக, ராகுல் காந்தி 15 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, லோக்தந்திரிக் ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (எம்) ஆகிய 15 எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் உட்பட சுமார் 100 காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை உணவை முடித்து கொண்டு, ஆலோசனை கூட்டத்தை தொடங்கினர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகதான் அழைப்பு விடுத்தேன்.

இந்த குரல் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைகிறதோ, அவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறும். இந்த குரலை ஒடுக்குவது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மிகவும் கடினமாக இருக்கும். ஒற்றுமையின் அடித்தளத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாம் ஒருங்கிணைப்புக்கான கொள்கைகளைக் கொண்டு வரத் தொடங்குவது முக்கியம். நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்’ என்றார். மேலும், இந்த கூட்டத்தில், நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் செயல்படுவது குறித்தும், பிரதமர் மோடிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு ராகுல்காந்தி தலைமையில் 15 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிளில் பேரணியாக நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அப்போது, ராகுல் காந்தி கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இந்திய மக்கள் போராடுகிறார்கள். நாங்கள் இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார். பின்னர், அனைவரும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.

Tags : Modi ,Rahul Gandhi , Urgent consultation of 15 party leaders to work together against Prime Minister Modi: Key decision at a meeting organized by Rahul Gandhi
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...