எப்படிதான் உ.பி முதல்வரை புகழ்கிறார்களோ... சவால்விடும் அமித் ஷா தீர்க்கதரிசியா?.. சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆவேசம்

லக்னோ: எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் அமித் ஷா தீர்க்கதரிசியா? என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆவேச கேள்வி எழுப்பி உள்ளார்.  அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் லக்னோ மற்றும் மிர்சாபூருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றார், அப்போது, அவர்  அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை பாராட்டியது மட்டுமின்றி, எதிர்கட்சிகளுக்கு சவால் விடும்படி பேசினார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தரபிரதேச முதல்வரைப் புகழ்வது எனக்குப் புரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், மாநிலத்தில் ஏராளமானோர் இறந்தனர். இறந்த உடல்களை எரிக்க கூட இடம் இல்லை. இரண்டாவது அலையின் போது மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறைகள் இருந்தன. உயிர்காக்கும் மருந்துகள் கள்ளமார்க்கெட்டில் விற்கப்பட்டன. ​

பாஜக ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கொள்ளை, கடத்தல், கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. ஒருவரின் வாழ்க்கை மற்றும் இறப்பை தீர்மானிக்கும் சக்தியாக குற்றவாளிகள் உள்ளனர். சமூகத்தில் வெறுப்பு பரப்பப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் தந்திரங்களை பாஜக செய்து வருகிறது. எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன தீர்க்கதரிசியா?

ஜனநாயகத்தில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். ஆனால், அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் எதிர்கட்சிகள் மோசமான தோல்வியை சந்திக்க  தயாராக இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறுகிறார். இதுதான் அவரது சர்வாதிகார மனநிலை. அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் தாண்டி 2022ல் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியமைக்கும்’ என்றார்.

Related Stories:

>