அமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சி தோல்வி; டெல்லியை விட்டே ஓடிவிடுகிறேன்: அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி விரக்தி

புதுடெல்லி: அரசியலை விட்டு விலகுவதாக கூறிய பாஜக எம்பியை, அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் சமாதானம் செய்துவைக்க முயன்றனர். ஆனால், அவர்களின் சமாதான முயற்சி தோல்வியடைந்ததால், அவர் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்ததால், பாடகரும், அசன்சோல் தொகுதி எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ கடந்த சில நாட்களுக்கு முன், தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இவரது, அறிவிப்பு பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து, பாபுல் சுப்ரியோ நீக்கப்பட்டதால் அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும், மேற்குவங்கத்தில் சுபேந்து அதிகாரிக்கு (முன்னாள் திரிணாமுல் அமைச்சர்) முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், அதனால் பல பாஜக தலைவர்கள் அதிருப்தியடைந்து அக்கட்சியில் விலகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை, பாபுல் சுப்ரியோ டெல்லியில் திடீரென சந்தித்தார்.

அவர்கள், அரசியலுக்கு முழுக்கு அறிவிப்பு வெளியிட்ட பாபுல் சுப்ரியோவை சமாதானப்படுத்தினர். அரசியல் இருந்து விலகும் முடிவை கைவிடுமாறு அறிவுறுத்தினர். அவர்களின் ஆலோசனைகளைப் பரிசீலித்த பாபுல் சுப்ரியோ, இறுதியான ஒரு முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அசன்சோல் எம்பி என்ற முறையில் எனது அரசியலமைப்பு கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுவேன். ஆனால் அரசியலில் இருந்து விலகி இருப்பேன். டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவேன்’ என்றார்.

அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் அறிவுரைக்கு பின்னரும், எம்பியாக தொடருவதாவும், அதே நேரம் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். அதனால், அமித் ஷா, ஜே.பி.நட்டாவின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: