×

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்

திருச்சி: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கிகளில் பயன்படுத்த 40க்கு 46 மி.மீ. அளவில் அண்டர் பேரல் கிரனேடு லாஞ்சர்(UBGL) எனப்படும் லாஞ்சர் கருவியை வடிவமைத்துள்ளது. இந்த புதிய கருவியை  துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த விழாவில்  தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகம் செய்தார். இந்த ஆயுதமானது திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையின் ஆர் அன்ட் டி துறை மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த ரக ஆயுதம் டிஏஆர் மற்றும் ஏகே47 துப்பாக்கிகளுடன் இணைக்கக் கூடிய வசதியை பெற்றுள்ளதால் எதிரி இலக்குகளை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்கி அழிக்கும் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இதை 400 மீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியும். இதனுடைய எடை 1.6 கிலோ. இந்த ஆயுதம் ஒற்றை ஷாட், ப்ரீச் லோடிங் லாஞ்சர் ஆகும். பல்வேறு வகை கையெறி குண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் இதன் சக்தியை அதிகரிக்க முடியும். அதன் மூலம் ஒரு சிப்பாய் டிஏஆர்/ ஏகே 47 தோட்டாவை பயன்படுத்துவதன் மூலமும் கையெறி குண்டுகளை வீசுவதன் மூலமும் எதிரி படையினரை அழிக்கவும், முன்னேறாமல் தடுக்கவும் முடியும்.

இந்த ஆயுதத்தை ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் டிஏஆர்/ ஏகே 47 துப்பாக்கியுடன் இணைக்கவும் பிரிக்கவும் முடியும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காலாட்படை, சிறப்பு படையினர், சட்டம் ஒழுங்கு பிரிவுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான போர்முறைகள் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் பொதுமேலாளர் ராஜீவ் ஜெயின், கூடுதல் பொதுமேலாளர் ஏ.கே.சிங், இணைப் பொதுமேலாளர் குணசேகரன், இணைப் பொதுமேலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Trichy Gun Factory , Introduction of AK47 grenade launcher at Trichy gun factory
× RELATED திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில்...