ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி; அரையிறுதியில் இந்தியா தோல்வி: 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியுடன் இந்தியா மோதவுள்ளது. நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தது. லீக் சுற்றில் முதல் போட்டியில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அடுத்து வலுவான ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக இந்தியா வீழ்த்தியது. தொடர்ந்து நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியிலும் இந்திய அணியின் அசத்தலான ஆட்டம் தொடர்ந்தது. காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இன்று காலை டோக்கியோவில் உள்ள ஒயி ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் ஹாக்கி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், நடப்பு உலக சாம்பியனான பெல்ஜியமும் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியம் வீரர் ஃபானி லுய்பெர்ட், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, அணிக்கான முதல் கோலை அடித்தார். 7வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதில் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 9வது நிமிடத்தில் மன்தீப் சிங், அட்டகாசமாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.

19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ஃபார்வர்ட் ஹென்ட்ரிக்ஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 2வது பாதியில் 49 மற்றும் 53வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை ஹென்ரிக்ஸ் அடித்தார். இதன் மூலம் இப்போட்டியில் அவர் ஹாட்ரிக் சாதனையை எட்டினார். தொடர்ந்து 60வது நிமிடத்தில் ஜான் டொமினிக் டோமென் ஒரு கோல் அடித்தார். 2வது பாதியில் இந்திய வீரர்களால் கோல் ஏதும் போட முடியவில்லை.

இதையடுத்து இப்போட்டியில் 5-2 என்ற ேகால் கணக்கில் பெல்ஜியம் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகள் மோதவுள்ளன. இதில் தோல்வியடையும் அணியை எதிர்த்து, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மோதவுள்ளது.

Related Stories:

More
>