×

தெற்கு பைபாஸ் ரோடு பாளையங்கால்வாய் பாலம் விரிவாக்கப்படுமா? நெல்லையில் சாலை பெரிது, பாலம் சிறிது: திணறும் வாகன ஓட்டிகள்

நெல்லை: நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் குறிச்சி சந்திப்பு அருகே பாளையங்கால்வாய் மீது காணப்படும் குறுகிய வாய்க்கால் பாலத்தால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இதனால் இங்கு அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கும் பைபாஸ் சாலை தச்சநல்லூர் வரை செல்கிறது. இதன் மூலம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு செல்லாமல் புறநகர் பகுதி வழியாக நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் மதுரை சாலைக்கு செல்ல முடியும் இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், லாரிகள், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட தொலை தூரங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து வரும் சாலைகள் நெல்லை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பைபாஸ் சாலையை இணைக்கின்றன.

பைபாஸ் சாலை பயன்பாட்டிற்கு வந்த போது இந்த சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது. வணிக நிறுவனங்களும் இந்தச் சாலையில் மிகக் குறைவு. ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை பயன்பாட்டில் உள்ளதால் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இந்தச் சாலைக்கு மாற்றாக தாழையூத்தில் தொடங்கி விஎம் சத்திரம், டக்கரம்மாள்புரம் வழியாக நாகர்கோவில் சாலையை இணைக்கும் வகையில் நான்கு வழிச் சாலையும் அமைக்கப்பட்டு விட்டது. எனினும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், வாகன போக்குவரத்து அதிகரிப்பு ஆகியவற்றால் பைபாஸ் சாலையில் வாகன நெரில் அதிகமாகி விட்டது. இதனால் இந்தச் சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலையில் வண்ணார்பேட்டை, ரயில்வே பாலத்தை தாண்டினால் பாளையங்கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த பாளையங்கால்வாய் மேல் பகுதியில் சாலையில் போக்குவரத்திற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் நெடுஞ்சாலையின் அகலத்தைவிட மிகவும் குறுகியதாக உள்ளது. நெல்லை புதிய பஸ் நிலையம் இந்தச் சாலையில் அமைந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் வரை செல்லும் பஸ்களும் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.

இவ்வாறு வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த தெற்கு புறவழிச்சாலையில் குறுகிய பாலத்தில் ஒரே நேரத்தில் இருபுறமும் இருந்து கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. அது மட்டுமல்லாது சில சமயங்களில் ஒரு வாகனம் ஒதுக்குப்புறமாக நிறுத்திக் கொண்டு மற்றொரு வாகனத்திற்கு வழிவிடும் நிலைமை உள்ளது. இதனால் பின்னால் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இரவு நேரங்களில் இந்த ஒடுங்கிய பாலத்தில் வாகனங்கள் கடந்து செல்லும் போது சில சமயங்களில் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே தெற்கு புறவழிச் சாலையில் குறிச்சி சந்திப்பு அருகே  பாளையங்கால்வாய் மீது மிகவும் குறுகலாக அமைந்துள்ள இந்த பாலத்தை அகலப்படுத்தி அமைத்து, வாகன விபத்துகளை தடுப்பதற்கு  சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதுவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : South Bypass Road ,Palayankalvai Bridge ,Nellai , Will the South Bypass Road Palayankalvai Bridge be widened? The road in Nellai is big, the bridge is small: choking motorists
× RELATED நெல்லை மக்களவை தொகுதிக்கு அரசு...