×

பசுமை திரும்பியுள்ளதால் முதுமலையில் சாலையோரம் உலா வரும் வன விலங்குகள்: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு

ஊட்டி:  முதுமலையில்  பசுமை திரும்பியுள்ளதால் சாலையோரங்களிலேயே வன விலங்குகள்  சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி,  சிறுத்தை, பல்வேறு வகையான மான்கள், கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள்  காணப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை  இப்பகுதிகளில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டதால் செடி, கொடிகள் காய்ந்து  போயின. தொடர்ந்து மே மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால்  இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் வறண்டு போயின. காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும்  தண்ணீர் கிடைக்காத நிலையில் விலங்குகள் அனைத்தும் உணவு, தண்ணீரை தேடி  அருகில் உள்ள மாயார் ஆற்றுபடுகை மற்றும் பந்திப்பூர் சரணாலயம் போன்ற  பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தன.

கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால்,  காப்பகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பசுமை திரும்பியுள்ளது. எங்கு  பார்த்தாலும் பசுமையாக காட்சிகளிக்கும் நிலையில், மான்கள், யானைகள் மற்றும்  காட்டு மாடுகள் போன்றவைகள் தற்போது சாலையோரங்களில் வலம் வருகின்றன. கொரோனா  பாதிப்பு காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படாத நிலையில், இங்கு  செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் மைசூர், கேரளா போன்ற பகுதிகளுக்கு  செல்லும் பயணிகள் சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை கண்டு  மகிழ்ச்சியடைகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பசுமை நிறைந்த முதுமலை  புலிகள் காப்பகம் மற்றும் விலங்குகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags : Green , Because the green is back Roadside in Mudumalai Wandering Wildlife: Tourists are amazed to see
× RELATED பீர்க்கங்காய் கிரேவி