ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை திருமூர்த்தி மலை , அமராவதி அணைக்கு வர தடை

உடுமலை: ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசைக்கு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. திருமூர்த்தி அணையும் உள்ளதால், ஆடிப்பெருக்கு திருவிழாவன்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பாலாற்றில் தாங்கள் கொண்டு வந்த முளைப்பாலிகை விட்டும், நீர் நிலை வழிபாடும் மேற்கொள்வதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

ஆடி அமாவாசை வழிபாடு : ஆடி அமாவாசைக்கு வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தை மற்றும் ஆடிப்பட்ட விதைப்பு  பணிகளை துவக்குவதற்கு முன், மாடு பூட்டிய வண்டிகள், ரேக்ளா மற்றும் குதிரை வண்டிகளில் திருமூர்த்தி மலை வந்து, மும்மூர்த்திகளை தரிசனம் செய்து விட்டு, அதற்கு பின்பே, சாகுபடியை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், ஆடி அமாவாசைக்கு, பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், மும்மூர்த்திகளை வழிபடவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசைக்கு திருமூர்த்திமலை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஆக. 3ம் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் ஆக. 8 ம் தேதி ஆடி அமாவாசையன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை, என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோல், அமராவதி அணைப்பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வர, இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: