×

வனக்குற்ற வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: வனக்குற்ற வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு குறித்து, ஒன்றிய, மாநில அரசு செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த நித்யா சவுமியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக வனத்துறை 3,305 ச.கி.மீ வனப்பரப்பு உடையது. வனப்பகுதியில் அரியவகை தாவரங்கள், பூக்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. வனவிலங்குகள், வனமரங்கள் உள்ளிட்டவை தற்போது பெருமளவு பொருள் ஈட்டும் வர்த்தகமாக மாறிவருகிறது. குறிப்பாக யானை தந்தம், பாம்பு தோல், புலித்தோல் மற்றும் பல், நகம் உள்ளிட்டவைக்காக விலங்குகள் வேட்ைடயாடப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக விலை கிடைப்பதால் தமிழக வனப்பகுதிகளில் விலங்குகள் கொல்லப்படுகின்றன.

சந்தனம், தேக்கு, ரோஸ்உட் உள்ளிட்ட மரங்களும் வெட்டி கடத்தப்படுகின்றன. இதுபோன்ற வனக்குற்றங்கள் அதிகரித்து வருவதால் வனப்பகுதி பாதிக்கிறது. எறும்புதிண்ணிக்கு சர்வதேச அளவில் அதிக விலை உள்ளதால் இங்கிருந்து பாகிஸ்தான், சீனா, மியான்மர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் கொல்லப்பட்ட எறும்புதிண்ணிகளின் ஓடுகள் 5.75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து சிறுத்தை நகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற வனக்குற்றங்களை தடுக்காவிட்டால், அரியவகை வனவிலங்குகள் அழிவதோடு மட்டுமின்றி வனமும் அழியும் நிலை உள்ளது.

எனவே, வனப்பகுதிகளில் நடந்த இதுபோன்ற குற்ற வழக்குகளின் விசாரணையை சிபிஐ அல்லது  சிபிசிஐடிக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி ஆகியோர், ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : CBI ,Union ,Governments , Forest case, CBI, order
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...