நெய்வேலியில் பயங்கரம்: மனைவியின் இரு கைகளை துண்டாக்கிய என்எல்சி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், சரோஜினி நாயுடு சாலையை சேர்ந்தவர் உத்தண்டராயர்(51). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயசித்ரா(45). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். வெளியூரில் கல்வி பயின்று வருகின்றனர். உத்தண்டராயர் கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனது மனைவிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு சென்று வீடு திரும்பிய உத்தண்டராயர், மனைவி ஜெயசித்ராவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து மனைவின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார். இதில் அவரது இரண்டு கைகளும் துண்டாகி கீழே விழுந்தது.

இதனால், ரத்த வெள்ளத்தில் ஜெயசித்ரா அலறித்துடித்து மயங்கி விழுந்தார். அப்போது மனைவியிடம் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்று கயிற்றால் தூக்குபோட்டு உத்தண்டராயர் தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே அலறியபடி ஓடி வந்த சித்ராவை அப்பகுதியினர் மீட்டு என்எல்சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.  6 மணி நேரத்திற்குள் வெட்டப்பட்ட கைகளை கொண்டு சென்றால் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், ஜெயசித்ராவின் இரண்டு கைகளையும் உறவினர்கள் ஐஸ் பெட்டியில் வைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: