×

தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் மரங்களை அழித்து சுற்றுச்சுவர்: இயற்கை ஆர்வலர்கள் வேதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்த மரங்களை அழித்து கோயில் நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைத்து வருகிறது. இதனால், இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.  மாமல்லபுரம், மையப் பகுதியில் அமைந்துள்ள  தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 103வது இடத்தில் உள்ளது. இந்த கோயில் இடத்தை யாரும் ஆக்கிரமிக்காத வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் 22 லட்சம் மதிப்பில் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கோயில் வளாகத்தை சுற்றி இருந்த 15 ஆண்டு பழமையான 10க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற யாரிடமும் கருத்து கேட்காமல் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து அகற்றியது. இதனால், இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கு, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உடனடியாக தலையிட்டு மீதமுள்ள மரங்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள பெரும்பாலான மரங்கள் அடுத்தடுத்து முறிக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலம், கோயில்களின் நகரமாக விளங்கும் மாமல்லபுரம் தற்போது அவற்றை பறிகொடுத்துள்ளது. மரங்களை, வெட்டுவதால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து, பல்வேறு சுவாச பிரச்னை ஏற்படும்.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள மரங்களை அழித்து வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல அதிகாரிகளே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, சுற்றி இருந்த மரங்களை வெட்டி கோயில் நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருவது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இதனை, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Thalasayana Perumal temple complex , Mamallapuram
× RELATED யானை தாக்கி விவசாயி பலி