மாதவரம் மேம்பாலத்தில் மாநகர பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் படுகாயம்

திருவொற்றியூர்:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை செங்குன்றம் நோக்கி மாநகர பேருந்து (த.எ.114) புறப்பட்டது. டிரைவர் சேகர் (45) பேருந்தை ஓட்டினார். இதில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். காலை 4.30 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகே பேருந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால தடுப்பு சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் பயணிகள் 8 பேர் படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்தவர்களை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். பின்னர், ராட்சத கிரேன் வரவழைத்து, கவிழ்ந்த மாநகர பேருந்தை நிமிர்த்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>