×

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டவர் பாஜவில் இருந்து அதிரடி நீக்கம்: பாஜ தலைமை அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில், பாஜ சார்பில் போட்டியிட்டு தோற்றவர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தணிகைவேல். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பாஜவில் இணைந்தார். சேர்ந்தவுடன் அவருக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வணிக பிரிவின் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர், சினிமா பைனான்சியராகவும் உள்ளார். அதன்பின்னர், அவர் திருவண்ணாமலை தொகுதி வேண்டும். தனக்கு சீட் கொடுத்தால் 20 கோடி செலவு செய்வேன் என்ற கூறியுள்ளார். இதை நம்பி அவருக்கு சீட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற பாஜவின் மாநில தலைவராக இருந்த முருகன் விடாப்பிடியாக இருந்தார். ஆனால், தணிகைவேலுவைப் பற்றி நல்ல எண்ணம் மக்களிடம் இல்லை என்று கட்சியினர் எடுத்துக் கூறியபோதும் முருகன் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அவருக்கு திருண்ணாமலை தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகுதான், அவர் மீது சிபிஐயில் வழக்கு இருப்பதாக மத்திய உளவுத்துறையில் இருப்பது தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அறிக்கை வந்தது. இதனால் சிபிஐயில் வழக்கு இருக்கும் ஒருவருக்கு எப்படி மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியே சீட் வழங்கலாம் என்று் உளவுத்துறை கூறியது. அதற்குள் தணிகைவேல் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். இதனால் மனுவை வாபஸ் வாங்கும்படி மேலிடம் வற்புறுத்தியது. ஆனால் மேலிடம் சொன்ன பிறகும் வாபஸ் பெற முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால், முன்னாள் அமைச்சர் தங்கமணி மூலம், அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை போடும்படி பாஜவே கேட்டுக் கொண்டது. இதனால், அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இதனால், வேறு வழி இல்லாமல் தணிகைவேலுவே தொடரட்டும் என்று மேலிடம் கூறிவிட்டது. ஆனால் அவரது தொகுதிக்கு கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய செல்லவில்லை. மேலிடம் கொடுத்த பணத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை. நிர்வாகிகளும் வேலை செய்யவில்லை. இதனால், அமைச்சர் எ.வ.வேலுவிடம் 94 ஆயிரத்து 673 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிந்தவுடன் தணிகைவேலுவை கட்சியை விட்டு நீக்கினால், பிரச்னை வெளியில் தெரிந்து விடும் என்பதால் தற்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இது குறித்து, பாஜ மாநில செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வணிக பிரிவின் மாநில துணை தலைவர் எஸ்.தணிகைவேல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தற்பொழுது கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாத காரணத்தினால் மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது’’ என்று கூறியுள்ளர். தேர்தல் முடிந்தவுடன் தணிகைவேலுவை கட்சியை விட்டு நீக்கினால், பிரச்னை வெளியில் தெரிந்து விடும் என்பதால் தற்போது கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.

Tags : Thiruvannamalai ,BJP , Thiruvannamalai constituency candidate fired from BJP: BJP leadership announcement
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...