போலீசாருடன் போதை ஆசாமி தகராறு டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல்: மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்

பெரம்பூர்: போதையில்  இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அவர் தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (26). சூளை பகுதியில் உள்ள மெடிக்கல் கம்பெனி குடோனில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் நண்பர்களான சீனிவாசன், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், நண்பர் கார்த்திக்கை வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு மற்றொரு நண்பர் சீனிவாசனுடன் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

பேசின் பிரிட்ஜ் அருகே டிம்பளர்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், பார்த்தசாரதி இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதனால், வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிய முடிவு செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த பார்த்தசாரதி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கிருந்த மின் வயரை பிடித்ததால், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். போதையில் பார்த்தசாரதி இவ்வாறு செய்துவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>