பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி 6 வாகனங்கள் சேதம்: 4 பேர் படுகாயம்

பல்லாவரம்: நங்கநல்லூர், இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ஹாலன் (22). இவர், நேற்று தனது சொகுசு காரில் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் அரைவா சிக்னல் அருகே சென்றபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அலறி கூச்சலிட்டனர். அதற்குள் கார் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஒரு சரக்கு வாகனம், ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் 3 பைக் உள்ளிட்ட 6 வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில், அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகன ஓட்டுநர் அம்பத்தூரை சேர்ந்த அஜித்குமார் (24), பைக்கில் வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (24), பொழிச்சலூரை சேர்ந்த ராஜா (25) மற்றும் சொகுசு காரை ஓட்டி வந்த ஹாலன் ஆகிய 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசர் வழக்குப்பதிவு செய்து ஹாலனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Related Stories:

>