×

ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கு நிதி ஒதுக்கக்கோரி வழக்கு அரசின் நிலையை நாளை தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவுப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழக வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கிய பின் துணைவேந்தர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகம் தொடர்ந்து பழைய தாலுகா அலுவலக கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்துகளை கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.அரசு தரப்பின் கருத்தை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.

Tags : J Jayalalithaa University , The case of J Jayalalithaa University seeking funding should be reported tomorrow: High Court orders
× RELATED ரூ.139 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்