சத்ரபதி சிவாஜி பெயரை மாற்றுவதா!: மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை உடைத்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்..!!

மும்பை: மும்பை விமான நிலையத்தின் பெயர் அதானி விமான நிலையம் என மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதானி விமான நிலையம் என்ற பெயர்  பலகையை சிவசேனா கட்சியினர் உடைத்து நொறுக்கினர். மும்பை சர்வதேச விமான நிலையம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் கைப்பற்றியது. இதையடுத்து அதானி விமான நிலையம் என்ற எழுத்துக்கள் வளாகத்தில் பொறிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், அதானி விமான நிலையம் என வைக்கப்பட்ட பெயர் பலகையை உடைத்து நொறுக்கினர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயர் மாற்றப்படுவதை ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்தின் நிர்வாக உரிமையை அதானி நிர்வாகம்  கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் கைப்பற்றியது. நிர்வாகம் கைக்கு வந்த உடனேயே சத்ரபதி சிவாஜியின் பெயர் மாற்றப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் 7 முக்கிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமையை அதானி நிறுவனத்திடம் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>