×

'நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள்'இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை அடுத்தடுத்து வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இன்று காலை டோக்கியோவில் உள்ள ஒயி ஸ்டேடியத்தில் நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களம் இறங்கியது.

பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சாய்த்தது. இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே ஆடவர் ஹாக்கியில், இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மகளிர் அணியின் இந்த சாதனை, இந்திய மக்களை ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chief Minister ,BC ,Indian Women's Hockey team ,Stalin , 'You have made history' Chief Minister MK Stalin praises the Indian women's hockey team
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...