சலுகைகளுக்காக பாஜவில் ஐக்கியமாகி விட்டார் ஜி.கே.வாசனை எப்படி காங்கிரசில் சேர்க்க முடியும்: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி தமாகா தலைவர் கோவில் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான தமாகாவினர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் சி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் முத்தழகன், எம்.பி.ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம், அடையார் துரை, துணை தலைவர்கள் பொன்கிருஷ்ணமூர்த்தி, இதயதுல்லா, பொது செயலாளர் காண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து கே.எஸ்.அழகிரி வரவேற்றார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலையால் மூப்பனாரால் தமாகா ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு தமாகா இடைக்கால தேவையாக இருந்தது. அதன் பிறகு சோனியாகாந்தி தீவிர அரசியலில் ஈடுபட்டபோது தமாகா காங்கிரஸில் இணைந்தது. அன்றைக்கு தமாகா லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமாகாவை தேவைக்காக ஆரம்பித்து இருக்கிறார்கள். அன்றைக்கு நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டணி கட்சிகள் எல்லாம் பாஜவை ஆதரித்தது. ஆனால் அன்றைக்கு தமாகா ஆதரிக்க முடியாது என்று ஜி.கே.மூப்பனார் அறிவித்தார்.

ஆனால், இன்றைக்கு சலுகைக்காக தமாகா, பாஜவிடம் ஐக்கியமாகி விட்டது. களைகள் நிறைந்த தோட்டமாக தமாகா உள்ளது. ஒரு தளபதிக்கு குதிரை, கத்தி இருக்க வேண்டும். இன்றைக்கு எதுவும் இல்லாமல் ஜி.கே.வாசன் இருக்கிறார். அப்படிப்பட்டவரை மீண்டும் எப்படி காங்கிரஸில் இணைத்து கொள்ள முடியும். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாஜ தலைவர் அண்ணாமலை உண்ணவிரதம் அறிவித்து இருப்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றால் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

Related Stories:

More