×

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதா?.....ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு, தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ(மதிமுக பொது செயலாளர்): அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பாஜக அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, இவ்வருடம் ஒன்றிய அரசே 100 சதவீதம் மருத்துவ படிப்புகளுக்கும், சிறப்பு படிப்பு மாணவர்களுக்கும் நடத்தும் என்பதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மாநில அரசின் உரிமையை குழித்தோண்டி புதைக்கின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது, ஜனநாயக சக்திகளுக்கு மறைமுகமாக அதிர்ச்சியளிக்கின்ற, நெருக்கடி அளிக்கின்ற ஒரு நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, இந்த வருடம் ஒன்றிய அரசின் கலந்தாய்வு நடவடிக்கைக்கு தமிழக அரசு இணங்கிடாமல் 100 சதவீதம் மருத்துவ மாணவர் மேற்படிப்புக்கான அந்த கலந்தாய்வினை, சிறப்பு படிப்புக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்திட வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் தமிழக அரசுக்கு துணை நிற்கும். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Union Government , Medical Studies, Student Admission, State Government, Union Government
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...