சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தடை செய்யப்பட்ட ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பெயரில் தொடரும் அடாவடி

* திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

* தமிழகம் முழுவதும் தொடருமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து,  தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற பெயரில் அடவாடி தொடர்ந்து நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல்துறை நடவடிக்கை தொடருமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1993ல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற அமைப்பை தற்போதைய போலீஸ் அகாடமி இயக்குனர் டிஜிபி பிரதீப் ஏ பிலிப், ராமநாதபுரம் எஸ்பியாக இருந்தபோது தொடங்கி வைத்தார். பின்னர் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது. இந்த அமைப்பில், இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.

காவல்துறைக்கும், பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழா காலங்களில் காவல் துறையினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனால், நாளடைவில் இந்த அமைப்பை சேர்ந்த சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை போலீசாகவே நினைத்து கொண்டு, பொதுமக்களை மிரட்ட தொடங்கினர். சில இடங்களில் பொதுமக்கள் மீது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.  இதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்தாண்டு சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேர் கடுமையாக தாக்கியதால் தான் தந்தை, மகன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. அந்த அமைப்பை கலைக்க வேணடும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த வருண்குமார் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிகமாக தடை விதித்தார்.  தொடர்ந்து திருச்சி டிஐஜி ஆணி விஜயாவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தடை விதித்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட எஸ்பிக்களும் இந்த அமைப்பிற்கு தற்காலிக தடை விதித்தனர்.

இந்த நிலையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்யுமாறு டிஜிபியாக இருந்த திரிபாதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு இல்லாவிடிலும், அதன் பெயரை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு மாநிலம் முழுவதும் சிலர் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு மதிக்கத்தக்க பெண் வழக்கறிஞர் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் திருவள்ளூர் நகர்பகுதியில் உள்ள தனியார் உணவகம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட முன்னாள் காவல் நண்பர்கள் குழுவில் இருந்த பேரத்தூர் ராமர் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன், பெண் வழக்கறிஞர் அருகில் சென்று நீ வக்கீல் தானே, எங்கே போகணும், வா நான் உன்னை கூட்டி செல்கிறேன் என்று அழைத்துள்ளார். அவர் மறுக்கவே குடிபோதையில் இருந்த அந்த வாலிபர், பெண் வழக்கறிஞரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார். அப்போது பெண் வழக்கறிஞர், இங்கிருந்து போகவில்லை என்றால், நான் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் கூறினார். ஆனால், அவர் தனக்கு காவல்துறையில் அனைவரையும் தெரியும். தானும் ஒரு போலீஸ் மாதிரி எனக்கூறி பெண் வழக்கறிஞரை மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். இது தொடர்பாக பெண் வழக்கறிஞர் திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், முன்னாள் காவல் நண்பர்கள் குழுவை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால், சீனிவாசன் என்பவர் தற்போது காவல்துறையில் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு காவல்துறையின் பெயரை துஷ்பிரயோகம் செய்து, என்னிடம் குடிபோதையில் தவறாக நடக்க முற்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பெயரை பயன்படுத்தி தவறான செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடுமயைான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories:

More
>