மெரினாவில் தனிநபர் நடைபயிற்சி செல்லலாம் கடற்கரை பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. எனினும், தனிநபர் நடைபயிற்சி மேற்கொள்ள தடையில்லை. மேலும், விழா, மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில்,  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் மூடப்பட்டது.ஏற்கெனவே, மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்ல தடை உள்ளது. எனினம், சாலையோரங்களில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், பொதுமக்கள் அதிகம் கடற்கரைக்கு வரக்கூடும் என்பதால் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா  கடற்கரையில் பிரதான சாலையான காமராஜர் சாலையில் நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 9 இடங்களில் வியாபாரம் செய்யவும், பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள்  தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. மேலும் மருத்துவமனைக்கு தினம்  சோதனைக்கு செல்பவர்கள் முகக்கவசத்தை கழற்றிக் கொண்டு செல்கின்றனர். அதனால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டுக்கு குடும்பத்துடன் செல்லாமல் ஒருவர் மட்டும் செல்ல வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசு சார்பில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனிநபர் நடைபயிற்சி செல்ல தடையில்லை. மேலும் மெரினாவிற்கு குடும்பத்துடன் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. காவல்துறை, மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. எனவே இரண்டு, மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிகபகுதிகள் மூடப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் பொதுமக்கள் மாவட்டம், மாவட்டம் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>