×

பெகாசஸ் விவகாரம்; 5ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: பெகசாஸ் விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், வரும் 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இது குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் அமளியிலும் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

இந்நிலையில், செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை அவரச மனுக்களாக விசாரிக்கும்படி கடந்த மாதம் 30ம் தேதி பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அதன்படி, இம்மனுக்கள் மீது வரும் 5ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court , The Pegasus affair; 5th hearing: Supreme Court notice
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...