×

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடுவது, புதிய உருமாற்றத்தால் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி: சிஎஸ்ஐஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பொதுமக்கள் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடுவதாலும், புதிய வைரஸ் மாறுபாடு காரணமாகவும் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி’ என ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) எச்சரித்துள்ளது. கொரோனா 2ம் அலை பாதிப்பு குறைந்து ஒரு மாதமே ஆன நிலையில், மீண்டும் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா மரபணு மாற்றங்கள், தடுப்பூசி, மருந்து, உபகரணங்கள் உருவாக்குவதில் ஒன்றிய அரசுக்கு உதவிடும் அறிவியல் மற்றும் தொழில் ஆராயச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் சேகர் மாண்டே, கொரோனா 3ம் அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா 3வது அலை ஏற்படுவது உறுதி. அதை தடுக்க முடியாது. ஆனால் மாஸ்க் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம். எப்போது, எப்படி 3ம் அலை ஏற்படும் என தெரியாது.

ஆனால், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் பொதுமக்கள் காட்டும் சோம்பேறித்தனத்தாலும், புதிய வகை வைரஸ் மாறுபாடுகளாலும் 3ம் அலை ஏற்படும். அதற்குள் நாம் தயாராக வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது புதிய அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. டெல்டா வகை வைரஸ்கள் மிகவும் அபாயகரமானவை என்றாலும், டெல்டா பிளஸ் பெரிய அளவில் கவலை கொள்ளக்கூடியது அல்ல. அதே போல, தடுப்பூசி அனைத்து வகையான வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்புரிவது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

குணமடைவோரை விட தினசரி பாதிப்பு அதிகம்
* நாடு முழுவதும் கொரோனாவால் தினசரி குணமடைவோரை விட, தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 831 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 39,799 பேர் குணமடைந்துள்ளனர்.
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 824.
* கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் பலியாயினர். மொத்த பலி 4 லட்சத்து 24 ஆயிரத்து 351.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை நாடு முழுவதும் 47 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* ஆயுஷ் அமைச்சகம், அஸ்வகந்தா ஆய்வு
ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தாவில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆன்டி வைரல்கள் இருப்பதாக டெல்லி ஐஐடி மற்றும் ஜப்பான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட் (ஏஐஐஏ), இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜின் அண்ட் டாபிகல் மெடிசின் (எல்எஸ்எச்டிஎம்) உடன் இணைந்து அஸ்வகந்தா குறித்து ஆய்வு நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூலிகை மருந்து இங்கிலாந்து நகரங்களில் 2000 பேருக்கு தந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுபோன்ற வெளிநாடுகளுடன் இணைந்து அஸ்வகந்தாவை ஆயுஷ் அமைச்சகம் ஆய்வுக்குட்படுத்துவது இதுவே முதல் முறை. அஸ்வகந்தா மன அழுத்தத்தை போக்கி, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமருந்தாகும். இந்த ஆய்வில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா சிறப்பாக செயல்புரியும் என நிரூபணமாகும் பட்சத்தில் இது கொரோனா சிகிச்சையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், இந்திய ஆயுர்வேத சிகிச்சைக்கு அறிவியல் பூர்வ அங்கீகாரம் கிடைக்கும்.


Tags : Corona , Flying controls in the air, new transformation ensures corona 3rd wave: CSIR warning
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...