×

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு உத்தரவு கல் வீசி தாக்குபவர்களுக்கு அரசு வேலை கிடையாது: பாஸ்போர்ட்டும் பெற முடியாது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை மீது கல் எறிதல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது, அவர்களுக்கு பாஸ்போர்ட்டும் கிடைக்காது என பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஜனாதிபதி தலைமையில் நிர்வாகம் நடக்கிறது. சமீபத்தில், காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸ் (நடத்தை மற்றும் முந்தைய செயல்பாடுகள் சரிபார்ப்பு) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிஐடி போலீசாரின் முறையான சரிபார்ப்பு இல்லாமல் யாரும் அரசு வேலையோ, பாஸ்போர்ட்டோ பெற முடியாது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் எறிதல் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட்டுக்கான ஒப்புதல் வழங்கக் கூடாது என சிஐடி போலீசாருக்கு யூனியன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை தோறும் பாதுகாப்பு படையினர் மீது சில இளைஞர்கள் கல் எறிந்து தாக்கும் சம்பவம் தொடர்கதையாக இருந்தது. தற்போது, இது 99 சதவீதம் குறைந்து விட்டது. இந்நிலையில், அரசு வேலைக்கு தகுதி பெற்றவர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் பின்னணியை சிஐடி போலீசார் தீவிரமாக சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புள்ளது, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா, கல் எறிதல் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா, குடும்பத்தினர் எப்படி என தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு, கல் வீசி தாக்குதலில் தொடர்பு இருந்தால் அரசு வேலையும், பாஸ்போர்ட்டும் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

* லடாக் எல்லையில் ஆய்வு 16ல் நிலைக்குழு பயணம்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவங்களுக்கு இடையே, எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண, இருநாட்டு ராணுவமும் இதுவரையில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்நிலையில், அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலவரத்தை நேரில் அறிய, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் எல்லை பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறது. நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இதற்கு தலைமை தாங்குகிறார்.

* கல்வி கற்பதாக கூறி சென்று தீவிரவாதியாக திரும்பினர்
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கல்வி விசா பெற்று பாகிஸ்தானுக்கு செல்லும் இளைஞர்கள் சிலர் தீவிரவாதிகளாக திரும்புகின்றனர். அவர்களுக்கு விசா வழங்குவதற்கு பதிலாக தீவிரவாத பாதையில் தடம் புரளாமல் நல்வழிப்படுத்த வேண்டும்’ என கூறியிருந்தது. இது குறித்து ராணுவ செய்திதொடர்பாளர் கூறுகையில், ‘‘சமீபத்தில் 40 இளைஞர்கள் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு கல்வி கற்க விசா பெற்று சென்றனர். வாகா எல்லை வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு சென்ற அவர்கள் தீவிரவாதிகளாக அனுப்பப்பட்டனர். ஆயுதங்களுடன் திரும்பிய அந்த இளைஞர்களில் 27 பேர் பல்வேறு என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எல்லை தாண்டி உள்ளனர். சிலர் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அவர்களை உன்னிப்பாக கவனிக்கிறோம்’’ என்றார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே, கெடுபிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Jammu and ,Kashmir , Stone-throwers in Jammu and Kashmir have no government jobs: Passports
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...