×

குத்துச்சண்டை காலிறுதி உலக சாம்பியனிடம் போராடி தோற்றார் சதீஷ்

ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை சூப்பர் ஹெவிவெயிட் பிரிவு (+91 கிலோ) காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார் நடப்பு உலக சாம்பியனான பகோதிர் ஜலோலாவுடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் கடுமையாகப் போராடிய சதீஷ் 0-5 என்ற கணக்கில் தோற்று பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார். ‘வலது கண்ணுக்கு மேலாக ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் போடப்பட்டிருந்தது மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததை பொருட்படுத்தாமல் தாய்நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற மன உறுதியுடன் சதீஷ் களமிறங்கி விளையாடினார். அதிலும் நம்பர் 1 வீரருக்கு எதிராக அவர் காட்டிய தீரம், தேசத்துக்காக இடி போன்ற குத்துக்களையும், மரண வலியையும் தாங்கிக் கொண்டது பாராட்டுக்குரியது’ என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சாகரை சேர்ந்த ராணுவ வீரரான சதீஷ் (32 வயது), பாக்சிங்கில் பயிற்சி பெறுவதற்கு முன்பாக கபடி வீரராக இருந்தார். அதே போல, எதிர்த்து விளையாடிய உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரும் (27 வயது) கால்பந்து வீரராக இருந்து பாக்சிங்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Satish , Satish lost to the world champion in the boxing quarterfinals
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது