ஆண்கள் ஹாக்கியில் அசத்தல் 49 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் இந்தியா: உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் நாளை மோதல்

டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. பரபரப்பான காலிறுதியில் இங்கிலாந்து அணியை நேற்று எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்தது. இதன் பலனாக 2வது நிமிடத்திலேயே தில்பிரீத் சிங் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். அடுத்து 16வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 3வது குவார்ட்டரின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் இயான் சாமுவேல் வார்ட் (45வது நிமிடம்) கோல் அடிக்க, ஆட்டம் விறுவிறுப்பானது.

இரு அணி வீரர்களும் பந்தை துடிப்புடன் கடத்திச் சென்று கோல் அடிக்க முனைப்பு காட்டியதால் கடைசி கட்ட நிமிடங்களில் அனல் பறந்தது. 57வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலையை அதிகரித்தார். மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணியினரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் 3-1 என வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 49 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

கடைசியாக 1972 மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் தான் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

1980ல் நடந்த மாஸ்கோ ஒலிம்பிக்சில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தாலும், அந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் மட்டுமே ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் மோதியதால் அரையிறுதி நடத்தப்படவில்லை. லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா - ஸ்பெயின் அணிகள் பைனலில் மோதின. அதில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்று 8வது முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. நடப்பு தொடரில், நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி உலக சாம்பியன் பெல்ஜியம் அணியின் சவாலை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

Related Stories:

More
>