மீன் மார்க்கெட்களில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் தகவல்

பெரம்பூர்: சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று துவங்கி வைத்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மனிஷ், சரண்யா ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து இந்த வாரம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. சென்னையில் 120ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. எனவே கொரோனா பாதிப்பு எந்த எந்த பகுதிகளில் உயர்ந்து உள்ளது என்பதை ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகளில் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மீன் மார்க்கெட்களில் மொத்த வியாபாரிகள் மட்டும் சென்று வாங்கும் வகையில் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.சி.எம்.ஆர் வழங்கிய சீரோ சர்வே அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>