கொரோனா சான்றிதழ் கட்டாயம் கேரள பயணிகள் தமிழகம் வர கட்டுப்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும், கேரளாவில் இருந்து தமிழக எல்லை வழியாக வரும் பயணிகளின் கொரோனா சான்று சரிபார்க்கப்படும். அதன் பிறகே அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை கேரள ரயில் பணிகளுக்கும் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைமுறையை ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்ததால்தான் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுக்குவர 4 மணி நேரமாகிறது. இனிமேல் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வரும். லண்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, உடல்வெப்பம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதை, ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்திவுள்ளார். எனவே, ஆக. 5ம் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து கோவை, குமரி உட்பட அனைத்து கேரள எல்லைகள் வழியாக தமிழகத்துக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்று கட்டாயமாகும். தமிழக- கேரள எல்லையில் வருவாய், காவல் துறை மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள் சரிபார்க்கப்பட்டு கண்கணிக்கப்படும். கேரளாவில் இருந்து தடுப்பூசிபோட்டு 14 நாள் கழித்து வருவோர், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை காட்டி தமிழகத்திற்குள் வரலாம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு பரிசோதனை சான்று தேவை இல்லை.

கேரளாவிலிருந்து ரயில் மற்றும் சொந்த வாகனத்தில் வருபவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சம் செலவில் கிருமி நீக்கும் நிலையத்தையும், ரூ.1.65 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட வில்லியம் நவீன அறுவை சிகிச்சை அரங்கத்தை, நான், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்துவைத்தோம். சென்னையில் திரு.வி.க நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

11 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலை, டெல்லிக்கு சென்ற போது வலியுத்தியிருக்கிறோம். அதன்படி நாமக்கல் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். இதேபோல் 11 மருத்துவக்கல்லூரியிலும் ஆய்வு முடிந்த பிறகு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

* ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து கேரள பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம்

* 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் நடைமுறை அமல்.

* இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு பரிசோதனை சான்று தேவை இல்லை.

Related Stories:

>