×

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா நெல்லை, தென்காசியில் மீண்டும் ‘அலர்ட்’ -பரவல் பகுதிகளில் கட்டுப்பாடு அதிகரிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை

நெல்லை: கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  பரவல் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரித்து கூடுதல் நடவடிக்கை  எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை மீண்டும் ‘அலர்ட்’ பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்  கொரோ னா 2ம் அலை குறைந்து கட்டுக்குள் வந்த நிலையில், அருகே உள்ள கேரளா  மாநிலத்தில் தொற்று பரவல் அதிவேகம் எடுத்துள்ளது. நாட்டின் மொத்த  பாதிப்பில் 50 சதவீதம் அளவு கேரளாவில் மட்டும் பதிவாகி வருகிறது.

அங்கு  கடந்த 4 நாட்களாக தினமும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு   வருகின்றனர். இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து நேற்றும், இன்றும் அங்கு 2 நாள் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவதால் அங்கு தொழில், பணி நிமித்தமாக வசிக்கும் தமிழகத்தை  சேர்ந்தவர்கள், சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக கேரளா  - தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கேரளாவில் இருந்து திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதனிடையே தமிழகத்திலும் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக  உள்ளது. சென்னை, கோவை, உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் மெல்ல  உயரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில்  சுகாதார கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக  தற்போது புதிதாக கொரோனா பாதிக்கப்படும் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக  அறிவித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த  நபர்களின் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அந்தபகுதிகளில்  வசிப்பவர்களுக்கும்  கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கேரளா, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் கட்டாய ெகாரோனா  பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியின்றி  கூடுவதை தடுப்பது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் போன்ற  நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மா வட்ட அளவில் நேற்று 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி மற்றும் நெல்லை மாநகர பகுதியில் நேற்று தலா 6 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. மேலப்பாளையம்,  நெல்லை மண்டலத்தில் தலா இருவரும், பாளை மண்டலத்தில் ஒருவரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். தச்சை மண்டலத்தில் பாதிப்பு இல்லை.

அண்ணா நகர்,  தியாகராஜநகர், தடிவீரன்கோயில் தெரு, சுத்தமல்லி பாரதியார் நகர் ஆகிய  இடங்களில் பாதிப்பு உள்ளது. ராதாபுரம் வட்டாரத்தில் 3 பேருக்கும் மானூர்,  நாங்குநேரி வட்டாரங்களில் தலா இருவரும் வள்ளியூர், களக்காடு பகுதியில் தலா  ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாளை. பாப்பாக்குடி வட்டாரங்களில் பாதிப்பு  இல்லை. கொரோனா பரவல் மேலும் அதிகரிக்காமல்  தவிர்க்க கேரளாவில் இருந்து தென்காசி மற்றும் நெல்லைக்கு ரயிலில் வருபவர்களுக்கும்  கேரளாவுக்கு சரக்கு வாகனங்களில் பொருட்களை எடுத்து செல்பவர்களுக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Tags : Kerala ,Tamil Nadu , Corona paddy to increase in Tamil Nadu following Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...