×

களக்காடு மலையில் கட்டுக்குள் வராமல் பரவி வரும் காட்டுத்தீ: வனத்துறையினர், கிராம மக்கள் தீயணைக்க போராட்டம்

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் பற்றிய பயங்கர காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், கிராம மக்கள் உள்பட 180 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு சிறுத்தை, புலி, கரடி, யானை, செந்நாய் , கடமான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு அரியவகை தாவர இனங்களும் உள்ளன. நேற்று முன்தினம் களக்காடு- திருக்குறுங்குடி வனச்சரகம் ஆனைகல்விளை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தலைமையில் வனச்சரகர் பாலாஜி முன்னிலையில் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்பட 50 பேர் சென்று மரக்கிளை வைத்து அடித்தும், மண்ணை அள்ளிப் போட்டும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. நேற்று 2வது நாளாக மாவடிமொட்டை பகுதியை தாண்டி தீ பரவியது.

இதையடுத்து அம்பை கோட்டத்தில் இருந்து வனத்துறை ஊழியர்களும், மேலமாவடி, சாலைப்புதூர் பிள்ளைகுளம் கிராமங்களில் இருந்து இளைஞர்களும் என 180க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதி. அங்கு குடிக்க தண்ணீர் வசதி இல்லை. மேலும் 10 கிமீ தூரம் நடந்து மட்டுமே செல்ல வேண்டியுள்ளது. தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குடிநீர், சாப்பாடு வனத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

தீயை கட்டுக்குள் கொண்டு வர நவீன சாதனங்களும் இல்லை. காற்றும் பலமாக வீசுவதால் தீயை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது. மேலும் தகிக்கும் வெப்பத்தால் தீயின் அருகில் செல்ல சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்மநபர்கள் வனத்திற்குள் நுழைந்து தீ வைத்து விட்டு தப்பியது தெரிய வந்துள்ளது. வனக்குற்றங்களில் ஈடுபட்டு கைதானவர்கள் திட்டமிட்டு தீ வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தீ வைத்தவர்களை கண்டறிந்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்தார்.

களமிறங்கிய துணை இயக்குநர்
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு, காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர நேரடியாக களம் இறங்கினார். காட்டுத்தீ பிடித்த ஆனைகல்விளை பகுதிக்கு விரைந்த அவர், தீயணைப்பு குழுவினருடன் இணைந்து மரக்கிளை வைத்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். அவ்வப்போது களத்தில் இருந்தே தீயணைப்பது பற்றி ஆலோசனைகளை வழங்கி சோர்வடைந்த ஊழியர்களை ஊக்குவித்தார்.


Tags : Kalakkadu hill , Wildfires spreading uncontrollably in Kalakkadu hill: Foresters, villagers struggle to put out fires
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி...