ஆத்தூர் ஒன்றியத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவிற்கு அளித்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியம் வண்ணம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு வந்த போது 15.02.2021ல் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ பிரிவுக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில், வண்ணம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல் போடிக்காமன்வாடியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், கடந்த 23.06.2021ல் ‘உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘தங்கள் பகுதியில் விளையும் மலர்கள் மற்றும் காய்கறிகளை,

நிலக்கோட்டை சந்தைக்கு கொண்டு செல்ல 3 கிமீ தூர மண் சாலையையே பயன்படுத்தி வருகிறோம். கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகிறோம். எனவே இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டார். இதன்பேரில் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு 2 பணிகளையும் உடனடியாக நிறைவேற்ற கூறினார்.

இதனையடுத்து மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து போடிக்காமன்வாடி பகுதியில் ரூ.49.96 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வண்ணம்பட்டியில் ரூ.27.70 லட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. புகார் மனு அனுப்பிய 20 நாட்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், பணிகளை முடிக்க உத்தரவிட்ட முதல்வர், அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

வடிகால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு இந்திரா காலனியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ரூ.4.65 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் யசோதை , ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள் முன்னிலை வகித்தனர்.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் கார்த்திக், ராம்குமார், சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் பெரிச்சி நன்றி கூறினார்.

Related Stories: