×

நத்தம் நகரில் நூலகம் அமைக்க வேண்டும்: வாசகர்கள் வேண்டுகோள்

நத்தம்: நத்தம் நகர் பகுதியில் காற்றோட்டத்துடனும், போதிய இட வசதியுடனும் புதிய நூலகம் அமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளனர். ஆனால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தகுந்தாற் போல் நகரின் மையப்பகுதியில் நூலகம் கிடையாது. மதுரை செல்லும் சாலையிலிருந்து, அய்யாபட்டி செல்லும் பாதையில் கிளை நூலகம் உள்ளது. இதனருகில் மயானம் உள்ளது.

மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்படும்போது, நூலகம் முழுவதும் மயான புகை நிரம்பி காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் வாசகர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகின்றனர். மேலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், இங்கு வருவதற்கு பெண் வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் இடநெருக்கடியால் வாசகர்கள் அவதியடைகின்றனர். இதுகுறித்து வாசகர்கள் சிலர் கூறுகையில், ‘எத்தனை சமூக வலைதளம், இணைய தளம் போன்றவை வந்தாலும் புத்தகங்கள் வாசிப்பதன் மூலமே கற்று உணர முடியும். இந்த நூலகம் செயல்படும் பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுகிறது.

எனவே நத்தம் நகர்ப்பகுதியில் காற்றோட்டத்துடன், போதிய இடவசதியுடன், வாசகர்கள் அதிகளவில் வந்து செல்லும் வகையில் புதிதாக நூலகம் அமைக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்கள், கல்வியாளர்கள், பெண்கள் என அனைவரும் பயன்பெற வாய்ப்பாக அமையும்’ என்றனர்.

Tags : To set up a library in Natham: Readers' Request
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...