கொள்ளிடம் தைக்காலில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

கொள்ளிடம்: கொள்ளிடம் தைக்காலில் முதன்முதலில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைக்கால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் புதியதாக ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் வைக்கப்பட்டு அது சில தினங்களில் செயல்பட உள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு மின்சார வாரியம் மூலம் தனியாக ஒரு மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை இயக்குவதன் மூலம் அனைத்து ஊராட்சிகளிலிருந்து பெறப்பட்ட மக்கும் குப்பைகள் இந்த இயந்திரத்தின் மூலம் அரைத்து மாவாக்கப்பட்டு,பின்னர் உரமாக தேவைப்படும் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பைகளை கண்ட கண்ட இடத்தில் கொட்டி சுகாதார கேடு விளைவிக்காமல் இருக்க முடியும்.

இனி குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் சேமிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பைகளை மறுசுழற்சி பயன்பாட்டுக்கும்,மக்கும் குப்பைகள் மட்டும் சேகரிக்கப்பட்டு அவைகள் இந்த இயந்திரத்தின் மூலம் மாவாக அரைக்கப்பட்டு வயலில் பயிருக்கு இடும் அளவுக்கு சத்துள்ள உரமாக தயார் செய்யப்படுகிறது. பின்னர் இந்த உரம் தேவைப்படும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது.

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சியில் மட்டுமே முதன்முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய ஆணையர் மீனா, பி டிஓ அன்பரசு, ஒன்றிய பொறியாளர்கள் பிரதீஷ்குமார், கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவபிரகாசம் ஊராட்சி செயலாளர் செந்தில் மற்று‌ம் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

More
>