×

கூடலூர் அருகே எச்சம் வயல் கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம்: விவசாய பயிர்கள் சேதம்

கூடலூர்: கூடலூரை அடுத்த எச்சம் வயல் கிராமத்தில் விநாயகன் என்ற காட்டு யானை விவசாய பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின. கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம் வயல், வடவயல் கிராமங்களுக்குள் எல்லையில் உள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வரும் விநாயகன் காட்டு யானை விவசாயிகளின் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளை இடித்து சேதப்படுத்தியும் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் இரவு நேரத்தில் வரும் இந்த யானையால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

யானையை விரட்டும் பணியில் இரவு நேரத்தில் வனத்துறையினர் ஈடுபட்டாலும் தினமும் யானை ஊருக்குள் வந்து செல்வதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த யானை கடந்த வருடம் இப்பகுதியில் சுமார் 5 க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்திய இந்த யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். இந்த யானை தற்போது முது மலையை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து மீண்டும் வீடுகளை உடைப்பதும் விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்துவதுமாக உள்ளது.

எனவே இந்த யானையை வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் அல்லது எல்லையிலுள்ள அகழியை சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wild Elephant Atture ,Kudalur , Wild elephant poaching in Echcham field village near Kudalur: Damage to agricultural crops
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...